போட்டி அரசாங்கம் நடத்த கவர்னருக்கு எந்த உரிமை கிடையாது - கி.வீரமணி
|மாநில அரசின் கொள்கைக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்த கவர்னருக்கு எந்த உரிமையும் கிடையாது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தான் பதவியேற்ற நாள் முதல் தற்போது வரை, தான் பதவி ஏற்கும்போது எடுத்த இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவே செயல்பட்டு வருகிறார் என்பது வெளிப்படையாகவே அனைவருக்கும் புரிகிறது.
தனிப்பட்ட அதிகாரம் எப்போது கவர்னருக்கு உண்டு என்றால், மாநிலத்தில் கவர்னர் ஆட்சி நடக்கும் நிலையில் மட்டுமே உண்டு. மற்றபடி, மாநில அரசின் கொள்கைக்கு எதிராக அவர் ஒரு போட்டி அரசாங்கம் நடத்த கவர்னருக்கு எந்த உரிமையும் கிடையாது.
ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நடப்பது என்ன?. பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதல்-அமைச்சருக்கு உரியது என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவையும் கிடப்பில் போட்டுள்ளார்.
ஒரு மசோதாவை மாநில அரசுக்கு அவரே திருப்பி அனுப்புவதை அரசு தெரிந்துகொள்ளுமுன், செய்தியாளர்களிடம் பேட்டியில் கூறுவது எவ்வகையில் அரசமைப்புச் சட்ட நெறிமுறைக்கு உகந்தது, ஏற்புடையது?. போட்டி அரசு என்பதைத் தவிர இவை வேறு எதைக் காட்டுகின்றன.
மக்கள் சக்தியைப் புறந்தள்ளிவிட்டு இப்படி - மக்களாட்சிக்குப் பதிலாக, பகிரங்கமான எதிர்விளைவுகளில் ஈடுபடுவது ஜனநாயக விரோதம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.