சட்டசபையில் குழப்பம் ஏற்படுத்த கவர்னர் திட்டமிட்டு செயல்பட்டார் - திருமாவளவன்
|சட்டசபையில் கவர்னர் உணர்ச்சிவசப்பட்டு செயல்படவில்லை என்றும், சட்டசபையில் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டே செயல்பட்டார் என்றும் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார்.
பாராட்டுக்கு உரியது
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று சந்தித்தார்.அவருடன் எம்.எல்.ஏ.க்கள் சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்தேன்.
சட்டமன்றத்தில் கவர்னரின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து, அவை மரபு மீறல் நடவடிக்கையை கண்டித்து உடனடி எதிர்வினையாற்றிய, முதல்-அமைச்சரின் நடவடிக்கை போற்றுதலுக்கு உரியது. பாராட்டுக்கு உரியது.
அரசியல் குழப்பம்
இது கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் இடையிலான கருத்து முரண் அல்ல. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான உறவு மற்றும் அதிகாரங்கள் தொடர்பான முரண்பாடு ஆகும். கவர்னர் உணர்ச்சி வசப்பட்டு இதை செய்யவில்லை. தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுதான் இதை செய்து இருக்கிறார். இது சங்பரிவார் அமைப்புகளால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட செயல்திட்டங்களில் ஒன்று.
கவர்னரின் ஒப்புதலோடு அச்சிடப்பட்ட உரையை, அவர் அப்படியே படிக்காமல் சில வார்த்தைகளை தவிர்த்து இருக்கிறார். சிலவற்றை தம் விருப்பம் போல் இணைத்து படித்து இருக்கிறார். அவர் ஏற்கனவே, நாகாலாந்தில் கவர்னராக, அரசு அதிகாரியாக பணியாற்றியவர். அவை மரபு அவருக்கு தெரியும். அவர் இருக்கும் பொறுப்பு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரதிநிதி என்பதையும் அவர் அறிவார். எனவே, முன் அனுபவம் உள்ள ஒருவர் இவ்வாறு செய்கிறார் என்றால், அது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று.
முதல்-அமைச்சருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் சைதாப்பேட்டையில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி வருகிற 13-ந்தேதி முற்றுகை போராட்டம் நடத்த இருக்கிறோம். இதில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்-அமைச்சருக்கு அழைப்பு
இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், தேசிய பொதுச்செயலாளரும், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான பி.கே.குஞ்சாலிகுட்டி மற்றும் எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து தங்கள் கட்சியின் 75-ம் ஆண்டு பவளவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.
அதற்கு முதல்-அமைச்சர், விழாவில் கலந்துகொள்வதாக ஒப்புதல் தெரிவித்ததாகவும் கூறினர்.