< Back
மாநில செய்திகள்
உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது - அன்புமணி ராமதாஸ்
மாநில செய்திகள்

உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

தினத்தந்தி
|
23 Sept 2023 2:07 PM IST

உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் விபத்துகளில் சிக்கி அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு, மூளைச்சாவடைந்த நிலையில், உயிரிழப்பதற்கு முன் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது பாராட்டப்பட வேண்டிய மிகச்சிறப்பான நடவடிக்கை ஆகும். தன் உறுப்புகளை கொடையாக வழங்கி, பல உயிர்களைக் காக்கும் ஈகியர்களுக்கு இதை விட சிறப்பான மரியாதையையும், அங்கீகாரத்தையும் அளிக்க முடியாது.

சென்னை அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த மாணவர் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை, மருத்துவர்களான அவரது பெற்றோர்கள் கொடையாக வழங்கியதன் காரணமாகவே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்பட்டது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த நான் ஹிதேந்திரனின் பெற்றோரை பாராட்டியதுடன், தேசிய உடல் உறுப்பு தானத் திட்டத்தையும் தொடங்கி வைத்தேன். அதன் பயனாக உடல் உறுப்பு தானம் என்பது இப்போது ஒரு கலாச்சாரமாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் மூளைச்சாவடைந்தவர்களின் உடல் உறுப்பை தானமாக பெறுவதில் பல குறைகள் இருப்பதாக இப்போதும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அந்த குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்; அனைத்து உடல் உறுப்பு தானங்களும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்; ஏழைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பெறுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் கடந்து உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

உடல் உறுப்புக் கொடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ஆம் நாள் உலக உறுப்புக் கொடை நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டில் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்ட செப்டம்பர் 23-ஆம் நாளை தமிழ்நாடு உடல் உறுப்புக் கொடை நாளாக அறிவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்