விழுப்புரம்
223 பேருக்கு ரூ.1 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்
|விழுப்புரத்தில் 223 பேருக்கு ரூ.1 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்
விழுப்புரம்
அரசு நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.லட்சுமணன், ச.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு தூய்மைப்பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டையும் மற்றும் 36 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர், பார்வைத்திறன் குறைபாடுடைய 20 பேருக்கு கைப்பேசி செயலிகளுடன் கூடிய திறன்பேசிகளும், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 120 பேருக்கு பேரிடர்கால உபகரண பொருட்களும், வருவாய்த்துறை சார்பில் 9 பேருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்திற்கான நிதியுதவியும், தாட்கோ சார்பில் 2 பேருக்கு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்கலன்களும், 36 பேருக்கு தொழில்முனைவோருக்கான வங்கி கடனுதவிக்கான மானியத்தொகையும் ஆக மொத்தம் 223 பேருக்கு ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களுக்கான திட்டங்கள்
அடுத்தவர்களின் நலனை காப்பதற்காக இரவு பகல் பாராமல் உழைத்திடும் தூய்மைப்பணியாளர்களின் நலனை காத்திடும் வகையில் நலவாரிய அட்டை வழங்கப்படுகிறது. தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகையான ரூ.3,500-லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தூய்மைப்பணியாளர்களுக்கான செயல்திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும். எனவே தூய்மைப்பணியாளர்கள் அனைவரும் நலவாரிய அட்டையை பெற்று பயனடைய வேண்டும். இதன் மூலம் கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, உயர்கல்வி படிப்பதற்கான வங்கிக்கடனுதவி, மகப்பேறு நிதியுதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான விடுதி உதவித்தொகை, தொழிற்படிப்பு உதவித்தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இதனை நல்ல முறையில் நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் சித்திக் அலி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் வாசன், கலைச்செல்வி, மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, ஆவின் பொது மேலாளர், பேரிடர் மேலாண்மை தாசில்தார் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.