கரூர்
முருங்கை காய்களை அரசே கொள்முதல் செய்யக்கோரிவிவசாயிகள் கலெக்டரிடம் மனு
|மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முருங்கை காய்களை அரசே கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 493 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 47 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 13 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 78 ஆயிரத்து 980 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தாய்பால் வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வினாடி-வினா போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 10 வாகனங்களை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கினார்.
அரசே கொள்முதல்...
கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தமிழகத்திலேயே மிக அதிக வெப்பநிலை உள்ள பகுதியாகவும், குறைந்த மழை பெய்யும் பகுதியாகவும் பரமத்தி உள்ளது. இதற்கு காரணம் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிகளே. எனவே இதனை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதிகளில் புதிதாக குளம், குட்டைகளை உருவாக்கி அதன் அருகே உள்ள ஆறுகளில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து நிரப்ப வேண்டும். செங்காந்தள் விதைகளுக்கு கிலோவுக்கு ரூ.3 ஆயிரத்து 500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அரவக்குறிச்சியில் விளையும் முருங்கை காய்களுக்கு கிலோ ரூ.50 விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் உருவாகும் உபரிநீரை சேகரிக்க அமராவதி, நங்காஞ்சி, குடகனாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் வகையில் நீர்வழியை உருவாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமான வீடுகள் வேண்டும்
இதேபோல் காலனி சேகர் தலைமையில் அரசு காலனி பொதுமக்கள் அளித்த மனுவில், ஈரோட்டை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் மக்களின் வருவாய்க்கு ஏற்ப வங்கிகளில் கடன் வாங்கி கொடுத்து, தரமான வீடுகளை கட்டி தருவதாக விளம்பரம் செய்திருந்தனர். அதன்படி எங்கள் பகுதியில் வீடும் கட்டிக்கொடுத்தனர். ஆனால் அவர்கள் வீடு கட்டிக்கொடுத்து 4 மாதங்களே ஆன நிலையில் வீட்டின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. மேலும் விளம்பரத்தில் கூறியபடி தார்சாலைகள், கழிவுநீர் வடிகால் வசதி, குடிநீர் வசதி, பூங்கா போன்றவை இன்னும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தரமான வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மெட்டல் சாலை
கடவூர் தாலுகா இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் அளித்த மனுவில், தற்போது அரசு சார்பில் செம்மடை-கவுண்டம்பாளையம் இடையே புதிய மெட்டல் சாலை அமைப்பதற்காக சாலைகளில் ஜல்லிக்கற்களை கொட்டியுள்ளனர். இந்த சாலை அமைய உள்ள இடமானது செம்மடையில் இருந்து நீர்த்தேக்கம் செல்கின்ற வழியில் உள்ள ஆற்றுவாரி புறம்போக்கு நிலமாகும். இந்த இடத்தில் சாலை அமைப்பதால் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் தடைபடும். எனவே இதுகுறித்து கலெக்டர் முறையாக ஆய்வு செய்து மெட்டல் சாலையை வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எரிமேடை இல்லை
வன்னியர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம் தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் மண்மங்கலம் தாலுகா நெரூர் தென்பாகம் அடுத்த என்.புதுப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறோம். எங்களது ஊரில் ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது. தற்போது அந்த வடிகாலை மூடாமல் உள்ளதால் அதில் குப்பைகளும், கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. மேலும் எங்கள் ஊரில் உள்ள சுடுகாட்டில் எரிமேடை இல்லை. இதனால் நாங்கள் அவதியடைந்து வருகிறோம். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.