மறுதேர்வில் மாணவர்கள் வெற்றியடைய அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
|மறுதேர்வில் மாணவர்கள் வெற்றியடைய அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
மறுதேர்வில் மாணவர்கள் வெற்றியடைய அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பேரிடர் காலத்தில், தமிழ் நாட்டில் நடந்த, 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சுமார் 6.70 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் பேர் பங்கெடுக்கவில்லை. அந்த மாணவர்களுக்காக, மறுதேர்வு நடத்த அரசு எடுத்த முடிவு அவசியமான ஒன்று.
அதே நேரத்தில் மாணவர்களை இந்த தேர்வுகளில் வெற்றியடைய செய்திடவும் அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளி மாணாக்கர், மாணவிகள், பழங்குடியின / பட்டியலின மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதுடன், தேர்வுக்கான பயிற்சி, மாணவர்கள் பயண ஏற்பாடுகள், அருகமை தேர்வு மையங்கள் என விரிவாக திட்டமிட்டு செயல்பட வேண்டும் என தமிழ் நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
என்று கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், "தமிழ்நாட்டில், கொரோனா காலத்தில் 513 மாணவியருக்கு குழந்தை மணம் நடந்துள்ள அதிர்ச்சிகரமான விபரம் பள்ளி கல்வி துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதில் 10 பேர், 8 ஆம் வகுப்பு மாணவியர். பாலின பாரபட்சத்திற்கு எதிரான தீவிர செயல்பாடுகளில் அவசியத்தை இந்த நிலைமை உணர்த்துகிறது.
தமிழ்நாடு அரசு, இந்த குறிப்பான பிரச்சினையில் நடவடிக்கை மேற்கொள்வதுடன், பாலின நிகர்நிலை கண்ணோட்டத்தை பிரச்சாரம் செய்ய சிறப்பு திட்டம் வகுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்." என்று கூறியுள்ளார்.