< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
தென்காசி
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
22 Jun 2023 12:30 AM IST

செங்கோட்டையில் பள்ளிக்கு செல்ல மறுத்த மகனுடன் ஏற்பட்ட தகராறால் அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கோட்டை:

செங்கோட்டையில் பள்ளிக்கு செல்ல மறுத்த மகனுடன் ஏற்பட்ட தகராறால் அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆசிரியை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள ஏ.கே.நகரைச் சேர்ந்தவர் அம்சுபாண்டி மனைவி கிருஷ்ணவேணி (வயது 42). இவர்களது மகன் விஸ்வநாத் நாராயன் (15). கணவர் பிரிந்து சென்றுவிட்டதால் கிருஷ்ணவேணி தனது மகனுடன் வசித்து வந்தார்.

செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு வேதியியல் பிரிவு ஆசிரியையாக கிருஷ்ணவேணி பணியாற்றி வந்தார். அவரது மகன் விஸ்வநாத் நாராயன் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தூக்குப்போட்டு தற்கொலை

விஸ்வநாத் நாராயன் சரியாக பள்ளிக்கு செல்லாமலும், ஒழுங்காக படிக்காமலும் இருந்து வந்தார். இதை கிருஷ்ணவேணி கண்டித்து வந்தார். இந்த சம்பவம் தினமும் நடைபெற்று வந்தது.

நேற்று காலையில் மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறில் தனது தாயாரை விஸ்வநாத் நாராயன் எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கிருஷ்ணவேணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து உடனடியாக செங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கிருஷ்ணவேணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளி முன்னதாகவே விடப்பட்டது

இதற்கிடையே, ஆசிரியை கிருஷ்ணவேணி இறந்த தகவல் அறிந்ததும் அவருடன் பணியாற்றும் சக ஆசிரியைகள் மற்றும் மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளிக்கூடம் முன்னதாகவே விடப்பட்டது.

இந்த சம்பவம் செங்கோட்டையில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்