திருச்சி
திருச்சியில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள்
|விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட திருச்சியில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் முடங்கி கிடந்த அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தவும் அவர்களது திறமையை வெளிப்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகளை, அரசு கல்வி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தன. அவ்வகையில் ராக்கெட் சயின்ஸ் என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி திட்டம் கடந்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது. பிரமோஸ் ஏவுகணையின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 500 பேர் கலந்து கொண்டனர். முடிவில் தேர்வு செய்யப்பட்ட 75 மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட நேற்று இரவு விமானம் மூலம் புறப்பட்டனர். இதில் திருச்சி மாவட்டத்தில் அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் கோபிநாத், பார்த்திபன் ஆகியோர் இடம் பிடித்தனர். பல்வேறு மாவட்ட குழுக்களுக்கு இடையே நடைபெற்ற ராக்கெட் சயின்ஸ் மாதிரி வடிவமைப்பு கண்காட்சியில் கோபிநாத், பார்த்திபனும் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தை பிடித்தனர். இவர்களுக்கு வழிகாட்டிய அறிவியல் ஆசிரியை கவிதா தலைமையிலான குழு மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. ராக்கெட் சயின்ஸ் தலைப்பில் ஆன்லைன் பயிற்சி திட்டத்தில் வென்று ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களும், ஆசிரியையும் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.