< Back
மாநில செய்திகள்
நீட் தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் பயிற்சி தொடக்கம்
மாநில செய்திகள்

'நீட்' தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் பயிற்சி தொடக்கம்

தினத்தந்தி
|
25 March 2024 2:19 AM IST

நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடக்கிறது. அந்தவகையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே முடிந்த நிலையில், நாடு முழுவதிலும் இருந்து 23 லட்சத்து 81 ஆயிரத்து 833 பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 593 மாணவர்களும், 13 லட்சத்து 63 ஆயிரத்து 216 மாணவிகளும், 24 திருநங்கைகளும் அடங்குவார்கள்.

இந்த புள்ளி விவரங்களில், உத்தரபிரதேசத்தில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 125 பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 216 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து மட்டும் 13 ஆயிரத்து 200 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடப்பாண்டுக்கான நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சியை வழங்கி வந்தது. பொதுத்தேர்வு வந்ததால், அந்த பயிற்சி நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடங்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பயிற்சிகள் இன்று தொடங்குகிறது.

மேலும் செய்திகள்