< Back
மாநில செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு
திருவாரூர்
மாநில செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு

தினத்தந்தி
|
13 Oct 2023 12:15 AM IST

தில்லைவிளாகம் கோவிலடி கிராமத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

தில்லைவிளாகம்:

தில்லைவிளாகம் கோவிலடி கிராமத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

சேதமடைந்த வகுப்பறை

முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் கோவிலடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 62 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சேதமடைந்து இருந்த 2 வகுப்பறை கட்டிடம் கடந்த ஆண்டு இடிக்கப்பட்ட நிலையில் இதுவரையிலும் புதிய கட்டிடம் கட்டித்தரவில்லை. இதனால் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக கொட்டகை அமைத்து அதில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

அதையடுத்து வெயில் நேரத்தில் அந்த கொட்டகையில் அமர்ந்து படிக்க முடியவில்லை என்றும், உடனடியாக புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் மற்றும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என்று வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

வகுப்புகள் புறக்கணிப்பு

இதை கண்டித்து நேற்று பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வகுப்புகளை புறக்கணிப்பு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் சிவகுமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன், ஆசிரியர் சங்கத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் இன்னும் 10 நாட்களில் தற்காலிகமாக போடப்பட்டுள்ள கொட்டகைக்கு தரைத்தளம் அமைத்து பக்கத்தில் அடைப்பு செய்து தரப்படும் எனவும், மேலும் புதிய கட்டிடத்திற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் கூறியதையடுத்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.

மேலும் செய்திகள்