< Back
மாநில செய்திகள்
ஆபத்தான நிலையில் அரசு பள்ளி கட்டிடங்கள்
சிவகங்கை
மாநில செய்திகள்

ஆபத்தான நிலையில் அரசு பள்ளி கட்டிடங்கள்

தினத்தந்தி
|
17 Oct 2022 12:15 AM IST

சிவகங்கை மாவட்டத்தில் பழுதாகி ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் பழுதாகி ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் குறைபாடுகள்

கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்று அழகிய தமிழில் கல்வியின் அவசியத்தை அவ்வையார் விளக்கி பாடினார். அந்த அளவிற்கு கல்வியின் நன்மையை கருத்தில் கொண்டு மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் தமிழகத்தில் பள்ளிக்கூடம் இல்லாத ஊரே இருக்க கூடாது என்ற எண்ணத்தில் பள்ளிகளை ஆரம்பித்தார். அந்தளவிற்கு கல்வியின் அவசியம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆரம்ப காலத்தில் கல்வியை அனைத்து மாணவர்களும் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு ஆரம்ப பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படித்து வந்தனர்.

ஆனால் காலப்போக்கில் அரசு பள்ளிகளில் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டதால் இன்று கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டு அதி நவீன வசதியுடன் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இதனால் அரசு பள்ளிகளில் படிப்பதை மாணவர்களின் பெற்றோர்கள் விருப்பமில்லாமல் தனியார் நோக்கி படையெடுக்கின்றனர். இருப்பினும் இன்னும் சில மாவட்டங்களில் தனியார் கல்விக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டு பல்வேறு நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது.

பழுதடைந்த பள்ளி கட்டிடம்

சிவகங்கை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் சில பள்ளிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் பழுதான நிலையில் இயங்கி வந்த 15-க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் அகற்றப்பட்டு தற்போது புதிய கட்டிங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட கட்டிடங்கள் பழுதான நிலையில் இயங்கி வருவதால் அங்கு மாணவர்களை அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றர்.

காரைக்குடி மூ.வி.அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம், காரைக்குடி அருகே உஞ்சனை அரசு தொடக்கப்பள்ளி, மொட்டையன்வயல் பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் பழுதான நிலையில் உள்ளது. தற்போது இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடிப்படை வசதிகள்

மொட்டையன்வயல் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு முன்பு இங்கு 10 குழந்தைகள் வந்தனர். இந்த கட்டிடத்தின் நிலை மற்றும் மின்வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தற்போது 2 குழந்தைகள் மட்டும் இங்கு வருகின்றனர். மேலும் இதேகிராமத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பழுது காரணமாக இடிக்கப்பட்ட தொடக்கப்பள்ளி கட்டிடத்திற்கான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. அதேபோல் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிகள் பழுதான நிலையில் இயங்கி வருகிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் தரப்பில் கூறியதாவது-

சுப்பிரமணியன் (உடற்கல்வியியல் ஆர்வலர்):- இன்றைய காலக்கட்டத்தில் கல்வி என்பது வருங்கால இந்தியாவை வல்லரசாக மாற்றும் இளைஞர்களை உருவாக்குவதுதான். இதன் காரணமாகதான் மறைந்த தலைவர்கள் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் டாக்டர் அப்துல்கலாம் ஆகியோர் கல்வி மீதும், வருங்கால மாணவர்கள் மீதும் அதிக அக்கறை கொண்டிருந்தனர். கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமானால் அதற்கு தரமான பள்ளி கட்டிடங்கள் அனைத்து வசதிகளுடன் இருக்க வேண்டும். அதற்கு அரசு நல்ல திட்டங்களை வகுத்து கட்டிடங்களை கட்ட வேண்டும். அப்போது தான் இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்களாக உருவாக முடியும் என்றார்.

அரசின் கடமை

அப்துல்ரசீது (எஸ்.புதூர்):- இன்றைய காலக்கட்டத்தில் ஒரு மனிதனை சமூகத்தில் உயர்த்துவது கல்விதான். அந்த கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் கொடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். எனவே மாவட்டத்தில் தரமற்ற பள்ளி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடத்தை கட்ட வேண்டும்.

எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கரிசல்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மொத்தம் 4 கட்டிடங்கள் உள்ளன. இதில் ஓட்டு கட்டிடம் முற்றிலும் சேதமான நிலையில் அதன் சுவர்கள் அடிக்கடி பெயர்ந்து விழும் நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி இதை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்