பெரம்பலூர்
அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதலிடம்
|அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
பேச்சுப்போட்டிகள்
தமிழக அரசின் உத்தரவின் படி மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நேற்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனித்தனியாக நடத்தப்பட்டது. போட்டிக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். காலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், மதியம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடுவர்களாக ஆசிரியர்களும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நடுவர்களாக பேராசிரியர்களும் செயல்பட்டனர். போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் 60 பேரும், கல்லூரி மாணவ-மாணவிகள் 22 பேரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடந்த பேச்சுப்போட்டியில் முதல் இடத்தை வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி பார்க்கவியும், 2-ம் இடத்தை பெரம்பலூர் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவர் முகுந்தனும், 3-ம் இடத்தை கவுல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி வனிதாவும் பிடித்தனர். போட்டியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பரிசுக்கு அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி அபிராமியும், லெப்பைக்குடிகாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி தஹ்சீன்பேகமும் பிடித்தனர்.
பரிசு
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் வேப்பந்தட்டை அரசு கலை-அறிவியல் கல்லூரியின் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு மாணவர் பூபாலனும், 2-ம் இடத்தை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை-அறிவியல் கல்லூரியின் பி.ஏ. 3-ம் ஆண்டு மாணவி காருண்யாவும், தனலட்சுமி சீனிவாசன் கலை-அறிவியல் கல்லூரியின் பி.ஏ. கணிதம் 3-ம் ஆண்டு மாணவி நிஷாவும் பிடித்தனர். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படவுள்ளது. இவை அல்லாமல் அரசு பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பேருக்கு சிறப்பு பரிசு தொகை தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது. இதேபோல் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் தனித்தனியாக பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.