< Back
மாநில செய்திகள்
தரம் உயர்த்தாமல் தள்ளாடும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தரம் உயர்த்தாமல் தள்ளாடும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

தினத்தந்தி
|
11 March 2023 9:46 PM IST

செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமங்களில் வசிப்பவர்களுக்கு எந்த நேரத்திலும் எளிதாக சிகிச்சை வேண்டும் என்பதற்காகவே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டன. 1,000 பேர் முதல் 50 ஆயிரம் பேர் வசிக்கும் கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

தரம் உயர்வு

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு முதன்மை சுகாதார உதவிகளை செய்வதிலும், குழந்தைகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்குவது, இளம்பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதுடன் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்களின் முக்கிய பங்காற்றுகின்றனர்.

இத்தனை சிறப்பு வாய்ந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றில் தற்போது டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் சேதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதேபோல் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையங்கள், பல அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படாமலும் உள்ளன.

கர்ப்பகால சிகிச்சை

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறையில் செயல்படும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அது ஆரம்ப சுகாதார நிலையமாக மட்டுமே செயல்பட்டு வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் சிகிச்சை பிரிவு, ஆயுர்வேத சிகிச்சை பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது. கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகாலம் மற்றும் பிரசவ கால சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதன் மூலம் செந்துறை, குடகிப்பட்டி, சிரங்காட்டுப்பட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வந்தனர். இதுமட்டுமின்றி பக்கத்து ஊர்களான குரும்பபட்டி, பெரியூர்பட்டி, கோவில்பட்டி, மணக்காட்டூர், கோட்டைப்பட்டி, சரளைபட்டி, மாதவநாயக்கன்பட்டி, ஒத்தக்கடை, அடைக்கனுர், நல்லபிச்சம்பட்டி, பாறைப்பட்டி, தட்டாமடைப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக செந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கே வந்து செல்கின்றனர்.

இங்கு 30 படுக்கைகள், ஒரு அறுவை சிகிச்சை மையம், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. தினமும் 500-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தலைமையிடமாக கொண்டு குட்டிப்பட்டி, மணக்காட்டூர் உள்பட 5 இடங்களில் துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

டாக்டர்கள் பற்றாக்குறை

தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது கர்ப்பிணிகளுக்கு முறையாக சிகிச்சை கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 5 டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் என 15 மருத்துவ பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 2 டாக்டர்கள், 5 மருத்துவ பணியாளர்கள் பணியாற்றுவதே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அறுவை சிகிச்சை மைய கட்டிடம் சேதமடைந்து உள்ளது. அதில் உள்ள உபகரணங்களுக்கான மின்சார இணைப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் மின்கசிவு ஏற்படுகிறது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை மையம் தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் செந்துறையில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நத்தம் அரசு மருத்துவமனைக்கே செல்ல வேண்டும்.

இதுதவிர டாக்டர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு போதுமான அளவு கட்டிட வசதி இல்லை. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அறுவை சிகிச்சை நடக்காததால் இங்கு செயல்பட்டு வந்த ரத்த வங்கியும் 2019-ம் ஆண்டுக்கு பிறகு செயல்பாட்டில் இல்லை.

இதுகுறித்து செந்துறையை சேர்ந்த பல்வேறு தரப்பினர் கூறிய கருத்துகள் வருமாறு:-

10 ஆண்டுகளுக்கு மேல்...

முருகன் (சமூக ஆர்வலர், பாறைப்பட்டி) :- மக்கள் தொகைக்கு ஏற்ப கிராமப்பகுதிகளில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால் செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் தரம் உயர்த்தப்படாமல் உள்ளது கவலை அளிக்கிறது. டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக கர்ப்பிணிகளுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதில்லை. எனவே மக்கள் கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டு விரைவில் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.

இந்திராணி ராஜேந்திரன் (குடும்ப தலைவி, செந்துறை) :- செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், முன்பு பிரசவம் மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சை அதிக அளவில் நடந்தது. இதனால் இப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகள் ஏராளமானோர் பலனடைந்தனர். அவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி, ஊட்டசத்து உணவு பொருட்கள் ஆகியவை கிடைத்தது.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப கால சிகிச்சை மட்டுமே கிடைக்கிறது. அறுவை சிகிச்சைக்காக அவர்கள் நத்தம் செல்ல வேண்டி உள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

செயல்படாத ரத்த வங்கி

கோபால் (வியாபாரி, செந்துறை) :- அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடக்கிறது. இதனால் உள்நோயாளிகளாக இருப்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். டாக்டர்கள், செவிலியர்களுக்கும் இரவில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுகிறது. எனவே ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு என்று தனியாக காவலாளியை அரசு நியமிக்க வேண்டும். அத்துடன் போலீசாரும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அதேபோல் அறுவை சிகிச்சை மையத்தையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரீகன் பிரபுதாஸ் (ஜவுளி வியாபாரி, பழனிபட்டி) :- அறுவை சிகிச்சை எதுவும் நடக்காததால் இங்கு செயல்பட்டு வந்த ரத்த வங்கி செயல்பாட்டில் இல்லை. இதனால் ரத்த தானம் கொடுக்க விரும்புபவர்கள் நத்தம் அல்லது திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அறுவை சிகிச்சை மையத்தை சீரமைப்பதுடன் ரத்த வங்கியையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதேநேரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தள்ளாடும் நிலையில் உள்ள அரசு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாக உள்ளது.

----------------------

மேலும் செய்திகள்