ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கும் தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்
|லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்ததை போல் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கும் தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் சமீப காலமாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நகை பணத்தை இழந்த மணலி புதுநகரை சேர்ந்த பவானி என்ற பெண் உள்பட பல பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
வேலை வாய்ப்பு இல்லாததாலும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிலும் இன்றைய இளைஞர்களும், பெண்களும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனர். எனவே இன்றைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டியது தமிழக அரசின் கடமை.
மேலும், பல குடும்பங்கள் சீரழிவுக்கு காரணமாக இருந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்ததை போல், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கும் தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இதற்கிடையே ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருப்பதை தே.மு.தி.க. சார்பில் வரவேற்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.