< Back
மாநில செய்திகள்
அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து விட்டு விலை உயர்ந்த மருந்துகளை ஏழைகளுக்கு கொடுப்பது இல்லை- நீதிபதி வேதனை
சென்னை
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து விட்டு விலை உயர்ந்த மருந்துகளை ஏழைகளுக்கு கொடுப்பது இல்லை- நீதிபதி வேதனை

தினத்தந்தி
|
27 Oct 2022 12:47 PM IST

அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.

சென்னை:

கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி, நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க கோரிசென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்ர்தார். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.

அப்போது, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்புக்கு பின், குரங்கு காய்ச்சல், இன்புளூயன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் என்ன? என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டார். மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழகத்தில் புதிது புதிதாக நோய்கள் பரவுவதற்கான காரணங்கள், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதால், அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் வினியோகிப்பது என்பது தீவிரமானது எனவும், இதில் மருந்து நிறுவனங்களுக்கும், சுகாதார துறைக்கும் தொடர்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என தெரிவித்த நீதிபதி, அந்த மருந்துகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவுகள் செய்யப்படுகின்றன என வேதனை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்