திருவள்ளூர்
பொன்னேரி நகராட்சியில் அரசு ஆஸ்பத்திரி நவீன மயமாக்கப்படும் - எம்.எல்.ஏ. உறுதி
|பொன்னேரி நகராட்சியில் அரசு ஆஸ்பத்திரி நவீனமயமாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் உறுதியளித்தார்.
உங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி 15 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை பட்டியலை அனுப்பி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகருக்கு கடிதம் எழுதினார். அதனை முன்னிட்டு பொன்னேரி நகராட்சி பகுதியில் நேற்று பொதுமக்களிடம் நீண்டகாலமாக உள்ள கோரிக்கைகளை மனுவாக பெறுவதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் தலைமை தாங்கினார்.
பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம்விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பொன்னேரி நகராட்சியில் உள்ள பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகளுக்காக தனி பிரிவு, 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவம், நவீன விபத்து சிகிச்சை பிரிவு, நவீன கட்டமைப்புடன் கூடிய கட்டிடங்கள், ரத்த மாற்று மற்றும் ரத்த சுத்திகரிப்பு நிலையம், இதயவியல் சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவுகளை உள்ளடக்கியவை குறித்து நடவடிக்கை எடுக்கவும், பொன்னேரியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மகளிருக்கு தனியார் கல்லூரி, நவீன விளையாட்டு திடல், நவீன பஸ் நிலையம், உழவர் சந்தை, சமத்துவபுரம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ. துரைசந்திரசேகரிடம் வழங்கினார்.
அதனை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. அரசு ஆஸ்பத்திரி நவீனமயமாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த கூட்டத்தில் நகராட்சி துணைத்தலைவர் விஜயகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் சதாசிவலிங்கம், பொன்னேரி நகர தி.மு.க. செயலாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.