ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 27ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு
|ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதிக்கு வரும் 27ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18-ந் தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன.
தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் வருகை தந்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 27ம் தேதி கல்வி நிறுவங்கள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வரும் 27ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.