< Back
மாநில செய்திகள்
அரசு டாக்டர்கள் போராட்டம்
மதுரை
மாநில செய்திகள்

அரசு டாக்டர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
12 Oct 2023 2:09 AM IST

மாநகராட்சி சுகாதார அலுவலரை கண்டித்து, மதுரையில் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை,

மாநகராட்சி அலுவலர்

மதுரை வண்டியூரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக, கடந்த 29-ந்தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்த பின்னர் அவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், மதுரை மாநகராட்சியின் சுகாதார அலுவலர், அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விதிகளை மீறி ஆவணங்களை திருத்தி உள்ளார். இதனால், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கோரி, அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

10-வது நாளாக நேற்றும் அரசு டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். மதுரை அரசு டாக்டர்களின் இந்த போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்களின் ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்ணா போராட்டம்

இந்தநிலையில், நேற்று மதுரை மருத்துவ கல்லூரி அருகே உள்ள இந்திய மருத்துவ சங்க கிளையில் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்திற்கு, இந்திய மருத்துவ கிளை டாக்டர்கள், தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் என ஏராளமானவர்கள் கருப்பு பட்டை அணிந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு, அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர்கள் மகாலிங்கம், அழகு வெங்கடேசன், அமனுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

இது குறித்து மாநில தலைவர் செந்தில் பேசுகையில், "மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்யக்கோரி போராட்டம் நடக்கிறது. இன்று (அதாவது நேற்று) அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துகிறார்கள். இதுபோல், அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள போவதில்லை என்றும், மாநில முழுவதும் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்களும் புறக்கணிக்கப்படுகிறது. வருகிற 16-ந்தேதி, தமிழகத்தின் அனைத்து மருத்துவ கல்லூரிகளின் மகப்பேறு பிரிவில் அவசரமில்லா அனைத்து அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்படும்.

பணிசுமையை குறைக்க...

இதுபோல், தமிழகம் முழுவதும் உள்ள மகப்பேறு டாக்டர்களின் பணிசுமையை குறைக்க, டாக்டர்கள் பணியிடங்களை இரட்டிப்பாக்க வேண்டும்.

அரசு மகப்பேறு டாக்டர்களை மென்டாரிங் முகாம்கள் போன்றவற்றில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்