< Back
மாநில செய்திகள்
பேச்சுப்போட்டியில் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் முதலிடம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பேச்சுப்போட்டியில் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் முதலிடம்

தினத்தந்தி
|
19 Sep 2023 6:54 PM GMT

பெரியார் பிறந்தநாளையொட்டி நடந்த பேச்சுப்போட்டியில் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

பேச்சுப்போட்டி

தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நேற்று நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள பாரத சாரணர் மாவட்ட பயிற்சி மையத்திலும், அரியலூர் மாவட்டத்திற்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது.

பெரம்பலூரில் நடந்த பேச்சுப்போட்டிக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். பெரம்பலூர்-அரியலூர் நடந்த பேச்சுப்போட்டியில் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தந்தை பெரியார் பற்றி பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

சாதனை

பெரம்பலூரில் நடந்த பேச்சுப்போட்டியில் முதல் இடத்தை வேப்பந்தட்டை அரசு கலை-அறிவியல் கல்லூரியின் இளங்கலை தமிழ் 3-ம் ஆண்டு மாணவர் பூபாலனும், 2-ம் இடத்தை பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலை-அறிவியல் கல்லூரியின் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி கலையரசியும், 3-ம் இடத்தை வேப்பூர் அரசு மகளிர் கலை-அறிவியல் கல்லூரியின் இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு மாணவி உமாதேவியும் பிடித்தனர். இதே போல் அரியலூரில் நடந்த பேச்சுப்போட்டியில் முதல் இடத்தை ஜெயங்கொண்டம் அரசு கலை-அறிவியல் கல்லூரியின் இளங்கலை தமிழ் 3-ம் ஆண்டு மாணவி செந்தமிழ்ச்செல்வியும், 2-ம் இடத்தை அரியலூர் அரசு கலை கல்லூரியின் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவர் கலைவாணனும், 3-ம் இடத்தை ஜெயங்கொண்டம் நேஷனல் கலை-அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி இளந்தென்றலும் பிடித்தனர்.

பரிசு

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறுவதால் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறந்தவுடன் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகிய பிறந்த நாளை யொட்டி பேச்சுப்போட்டி நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்