புதுக்கோட்டை
திருமயம் பஸ்நிலையத்தில் நின்று செல்லாத அரசு பஸ்கள்
|திருமயம் பஸ்நிலையத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமயம் பஸ் நிலையம்
திருமயம் வழியாக காரைக்குடி, தேவக்கோட்டை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகிறது. திருமயம் பஸ் நிலையத்தின் உள்ளே டவுன் பஸ்கள் மட்டுமே சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி வருகிறது. மற்ற பஸ்களுக்கு நிறுத்தம் அமைக்கப்பட்டும் எந்த ஒரு பஸ்களும் உள்ளே செல்வதும் கிடையாது, நிற்பதும் கிடையாது. பொதுமக்களை சாலையிலேயே ஏற்றி, இறக்கி விட்டு சென்று விடுகிறது. இதனால் வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் பஸ்சில் ஏற முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள்.
மேலும் இரவு 9 மணிக்கு மேல் பல்வேறு பஸ்கள் திருமயம் நகருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடுகிறது. இதனால் பயணிகள் திருமயத்தில் இறங்கி பல்வேறு கிராம பகுதிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
சென்னை செல்ல சிரமம்
திருமயம் பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இந்த பஸ்நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து சுற்றுப்புறத்தில் மின்விளக்குகள் அமைத்து அனைத்து பஸ்களும் உள்ளே சென்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பாலாஜி:- அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் சார்பாக சென்னைக்கு 2 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த இந்த பஸ்கள் திருமயம் நகருக்குள் வருவதும் இல்லை. இங்கேயிருந்து புறப்படுவதும் இல்லை. இதனால் திருமயம் நகரை சுற்றிலும் நூற்றுக்கணக்கில் உள்ள கிராம மக்கள் சென்னைக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் தனியார் பஸ்களில் பயணிப்பது இயலாதது ஆகும். எனவே தமிழக சட்டத்துறை அமைச்சரின் சொந்த தொகுதியின் தலைமையிடமான திருமயம் நகரிலிருந்து சென்னை சென்று வர நிரந்தரமாக இப்பஸ்களை இயக்கிட வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
முருகராஜ்:- திருமயம் நகருக்குள் பகலில் வரும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ் ஒன்று திருமயம் நகருக்குள் இரவில் வருவது இல்லை. இரவு நேரத்தில் காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் மதுரை ஆகிய வழித்தடங்களில் இரு மார்க்கமாக செல்லும் பல அரசு பஸ்கள் இரவு நேரத்தில் நகருக்குள் வர மறுக்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் திருமயம் - காரைக்குடி செல்ல வேண்டுமென்றால் புதுக்கோட்டை செல்லும் பஸ்சில் ஏறி லேனா விளக்கு சுங்கச்சாவடியில் இறங்கி அங்கேயிருந்து காரைக்குடி செல்லும் பஸ்சில் ஏற வேண்டிய அவல நிலை உள்ளது.
காரைக்குடியிலிருந்து திருமயம் செல்லும் பஸ்சில் ஏறினால் புறவழிச்சாலையில் தான் இறக்கி விடுவோம் என்கிறார்கள். காரைக்குடி- திருச்சி செல்லும் தனியார் பஸ் ஒன்று மதியம் 3.30 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கும் திருமயம் நகருக்குள் வர மறுக்கிறார்கள். புறவழிச்சாலை பயணத்தை மேற்கொள்ளும் இத்தகைய பஸ்களால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அரசு மற்றும் தனியார் பஸ்களை திருமயம் பஸ் நிலையத்திற்கு சென்று பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு பஸ் பணிமனைகள்
கோபிநாத்:- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் 5 சட்டமன்ற தொகுதியின் தலைமையிடம் மற்றும் சட்டமன்ற தொகுதியின் தலைமையிடம் அல்லாத ஊர்களில் கூட அரசு பஸ் பணிமனைகள் உள்ளன. சட்டமன்ற தொகுதியின் தலைமையிடம், தாலுகா தலைமையிடம் மற்றும் 2 தேசிய நெடுஞ்சாலைகளை இணைத்திடும் மையத்தில் உள்ள திருமயத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு பஸ் பணிமனைக்காக பூமி பூஜை போடப்பட்டும் இன்று வரை பணிமனை வேலைகள் நிறைவடையாமல் உள்ளன.
பஸ்கள் பழுது ஏற்படும் போதும், விபத்துகள் ஏற்படும் போதும் 20 கி.மீ. தொலைவில் உள்ள புதுக்கோட்டை பணிமனையிலிருந்து தான் பணியாளர்கள் வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. சட்டமன்ற தொகுதியின் தலைமையிடமான திருமயம் நகரிலிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, பழனி, சேலம் போன்ற ஊர்களுக்கு நேரிடையாக பஸ் வசதிகள் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் நேரிடையாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.