< Back
மாநில செய்திகள்
தாளவாடி அருகே சேற்றில் சிக்கிய அரசு பஸ்
ஈரோடு
மாநில செய்திகள்

தாளவாடி அருகே சேற்றில் சிக்கிய அரசு பஸ்

தினத்தந்தி
|
20 May 2022 9:40 PM IST

சேற்றில் சிக்கிய அரசு பஸ்

தாளவாடி அருகே சேற்றில் அரசு பஸ் சிக்கியதால் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

மலைவாழ் மக்கள்

தாளவாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட தலமலை ஊராட்சியில் தடசலட்டி, இட்டரை, காளிதிம்பம் போன்ற மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மலைவாழ் மக்களின் வசதிக்காகவும், பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் சென்று வரவும் அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள சாலைகள் ஆங்காங்கே பழுதடைந்து காணப்படுகிறது.

சேற்றில் சிக்கியது

இந்த நிலையில் நேற்று நேற்று முன்தினம் சத்தியமங்கலத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று தடசலட்டி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தது. பெஜலட்டியில் இருந்து தடசலட்டி வரை செல்லும் சாலை மண் ரோடு ஆகும். இதனால் அந்த வழியாக பஸ் சென்றபோது வசமாக சாலையில் உள்ள சேற்றில் சிக்கி கொண்டது. நீண்ட நேர முயற்சிக்கு பின்னர் பஸ் சேற்றில் இருந்து மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பயணிகள் தங்களுடைய கிராமத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.

தார்ரோடு

இதேபோல் நேற்று மாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று அதே சாலை வழியாக சென்றது. மண் சாலை என்பதுடன், அது செங்குத்தாக இருந்ததால், பஸ்சின் சக்கரங்கள் ஒரே இடத்தில் சுற்றியபடி இருந்தது. பஸ்சால் மேற்கொண்டு முன்னேறி செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து பஸ்சை அதன் டிரைவர் மேற்கொண்டு இயக்காமல் மீண்டும் சத்தியமங்கலத்துக்கு திருப்பி செல்ல முயன்றார். வனச்சாலை என்பதால் பஸ்சை திருப்ப அங்கு இடம் இல்லை. இதனால் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ்சை பின்ேனாக்கி இயக்கி சென்ற பிறகு அங்கிருந்து திரும்பி சத்தியமங்கலத்துக்கு பஸ் சென்றது. இதனால் பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தங்களுடைய கிராமத்துக்கு நடந்தே சென்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில், 'பெஜலட்டியில் இருந்து இட்டரை, தடசலட்டி செல்லும் சாலையை தார் ரோடாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்