திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து - டிரைவர் பலி
|திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் கவிழ்ந்த விபத்துக்கு காரணமான லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
திருச்சி:
திருச்சி தீரன்நகரில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து துறையூர் பணிமனைக்கு சென்ற அரசு பஸ்சை துறையூரை சேர்ந்த ரெங்கநாதன்(வயது 50) என்பவர் ஓட்டி சென்றார். அந்த பஸ்சில் தீரன்நகரில் பணியாற்றும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 6 பேர் பணி முடிந்து அதே பஸ்சில் வீட்டிற்க்கு சென்றனர்.
அப்போது பஸ் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம் வழியாக பொன்மலை-ஜி கார்னர் அருகே சென்றபோது, இடதுபுறம் சர்வீஸ்ரோட்டில் லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்தது. அந்த லாரி திடீரென சர்வீஸ்ரோட்டில் இருந்து ஜி-கார்னர் பாலத்துக்கு மாறியபோது, அரசு பஸ்சை பக்கவாட்டில் வேகமாக உரசி சென்றது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத டிரைவர் ரெங்கநாதன் பஸ்சை வலதுபுறமாக திருப்பினார். இதில் அந்த பஸ்கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புகட்டையை (சென்டர் மீடியன்) இடித்து தள்ளி எதிர்சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிரைவர் ரெங்கநாதன் பஸ்சின் அடியில் சிக்கி கொண்டு உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பஸ்சுக்குள் அமர்ந்து இருந்த ஊழியர்கள் 6 பேரும் இடிபாடுகளில் சிக்கினர்.
இவர்களில் காயம் அடைந்து இருந்த 4 பேரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த பஸ்சை மேலே தூக்கி ரெங்கநாதனின் உடலை வெளியே கொண்டு வந்தனர்.
இதற்கிடையே விபத்து ஏற்பட காரணமாக இருந்த லாரியை திருச்சி பழைய பால்பண்ணை அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த லாரி புதுக்கோட்டையில் செங்கல் கற்களை இறக்கிவிட்டு தர்மபுரி நோக்கி சென்று கொண்டு இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
மேலும், ஜி-கார்னர் அருகே பஸ் கவிழ்ந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.