மதுரவாயலில் அரசு பஸ் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்து: ஆட்டோ ஓட்டுநர் பலி
|மாநகர பஸ் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் தாம்பரம் - மதுரவாயல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை,
செங்குன்றத்தில் இருந்து தாம்பரம் நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது 104 வழித்தட சென்னை மாநகர பஸ். இந்தநிலையில் மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் சாய்ந்து, சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது.
அப்போது, சர்வீஸ் சாலையில் ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருந்த நிலையில், அதன் மீது விழுந்து ஆட்டோவை அப்பளம் போல் நொறுக்கியது. இதில், ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பஸ் கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தாம்பரம் - மதுரவாயல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரவாயல் அருகே அரசு பஸ் கவிழ்ந்து ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.