பறை இசைக்கருவியை எடுத்து வந்த மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட விவகாரம் - அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்
|நெல்லையில் அரசு பேருந்து நடத்துனரை சஸ்பெண்ட் செய்து அரசு போக்குவரத்து கழக மண்டல இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை,
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதம் என்பவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பறை உள்ளிட்ட இசைக்கருவிகளை கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இசைக்கருவிகளை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்தில் ஏறியுள்ளார். இசைக்கருவிகளை பேருந்தில் ஏற்றிச் செல்வதற்கும் நடத்துனர் அனுமதி வழங்கியுள்ளார்.
பேருந்து செல்லத் தொடங்கியதும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கிய நடத்துனர், மாணவி கொண்டு வந்த பறை உள்ளிட்ட இசைக்கருவிகள் குறித்து அவதூறாகவும், அநாகரீகமாவும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியை பாதி வழியில் வண்ணாரப்பேட்டை பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
அங்கு இரவு நேரத்தில் மாணவி இசைக்கருவிகளுடன் செய்வதறியாது நின்று கொண்டிருந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து செய்தியாளர்கள் சிலர் அந்த பகுதிக்குச் சென்று மாணவியை வேறு பேருந்தில் ஏற்றி மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் சர்ச்சையானதை தொடர்ந்து, குறிப்பிட்ட பேருந்து நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து எத்தனை மணிக்கு புறப்பட்டது என்பதை கண்டறிந்து, அரசு பேருந்து நடத்துனர் கணபதி என்பவரை சஸ்பெண்ட் செய்து அரசு போக்குவரத்து கழக மண்டல இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து அந்த நடத்துனரிடம் இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.