< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில் ரூ.8.20 கோடியில் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறைக்கு ஒருங்கிணைந்த கட்டிடம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் ரூ.8.20 கோடியில் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறைக்கு ஒருங்கிணைந்த கட்டிடம்

தினத்தந்தி
|
29 Jun 2023 12:30 AM IST

நாமக்கல்லில் ரூ.8.20 கோடியில் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறைக்கு ஒருங்கிணைந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

நாமக்கல்லில் ரூ.8 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஒருங்கிணைந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

புதிய கட்டிடம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஒருங்கிணைந்த கட்டிட வளாகம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.8.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது. இந்த அலுவலக வளாகம் 2 தளங்களை கொண்டதாகும். இதன் மொத்த பரப்பளவு 27 ஆயிரத்து 38 சதுரடிகளாகும்.

இந்த அலுவலக வளாகத்தில் தரைத்தளத்தில் மாவட்ட கலெக்டர் அறை, மகளிர் திட்ட அலுவலகம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), உதவி இயக்குனர் (தணிக்கை), ஆய்வு கூட்ட அரங்கம் ஆகியவை அமைந்துள்ளது. மேலும் முதல் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் அமைந்து உள்ளது. புதிதாக கட்டப்பட்டு உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கட்டிடத்தை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பூமாலை வணிக வளாகம்

இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.க்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், ஏ.கே.பி.சின்ராஜ், கலெக்டர் உமா, எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

இதை தொடர்ந்து நாமக்கல்லில் ரூ.8 லட்சத்து 65 ஆயிரம் செலவில் புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அசோக்குமார், உதவி இயக்குனர் (தணிக்கை) உமா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தங்கவேலு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பாவேசு மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்