< Back
மாநில செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டியில்  சொந்த கட்டிடங்களுக்கு ஏங்கும் அரசு அலுவலகங்கள்
தர்மபுரி
மாநில செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டியில் சொந்த கட்டிடங்களுக்கு ஏங்கும் அரசு அலுவலகங்கள்

தினத்தந்தி
|
12 Nov 2022 6:45 PM GMT

பாப்பிரெட்டிப்பட்டியில் சொந்த கட்டிடங்களுக்கு ஏங்கும் அரசு அலுவலகங்கள்

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிபட்டியில் வாடகை கட்டிடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களுக்கு போதிய அடிப்படை வசதிகளுடன் கூடிய சொந்த கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாடகை கட்டிடங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் பாப்பிரெட்டிப்பட்டி நகரமும் ஒன்றாகும். தாலுகா மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைமை இடமான பாப்பிரெட்டிப்பட்டியில் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் பிற தாலுகா பகுதிகளில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களில் பெரும்பாலானவை சொந்த கட்டிடங்களில் இயங்கி வரும் நிலையில் பாப்பிரெட்டிப்பட்டியில் பல்வேறு அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. வழக்குகள் விசாரணைக்காக தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் கோர்ட்டு பாப்பிரெட்டிபட்டியில் வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது.

இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தீயணைப்பு நிலையமும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. உதவி தொடக்க கல்வி அலுவலகம், வட்டார வீட்டு வசதி வாரிய அலுவலகம், நகர வீட்டு வசதி வாரிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகின்றன.

சிரமத்திற்கு உள்ளாகும் பொதுமக்கள்

இதன் காரணமாக இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்கள், பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த இயலாத நிலை ஏற்படுகிறது. இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

எனவே இத்தகைய அலுவலகங்களுக்கு சொந்தமாக அரசு கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இடவசதி இல்லை

வக்கீல் விவேகானந்தன்:- பாப்பிரெட்டிப்பட்டியில் தர்மபுரி- சேலம் சாலையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டு இயங்கி வருகிறது. தினமும் குற்ற வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் விசாரணை நடக்கும் இந்த கோர்ட்டுக்கு வக்கீல்கள், பணியாளர்கள், போலீசார் மற்றும் வழக்குதாரர்கள் என தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு பொதுமக்கள் அமர போதுமான இடவசதி இல்லை. வக்கீல்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பிட வசதி இல்லை. இங்கு விசாரணை கைதிகளை அழைத்து வரும் போலீசாரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அரசு அதிகாரிகள் விரைவாக நிலம் ஒதுக்கீடு செய்து அனைத்து அடிப்படை வசதிகளுடன் கோர்ட்டுக்கு சொந்த கட்டிடத்தை கட்ட வேண்டும்.

தீயணைப்பு நிலையம்

சமூக ஆர்வலர் ராஜேந்திரன்:- தர்மபுரி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் செயல்படும் பகுதியாக பாப்பிரெட்டிப்பட்டி உள்ளது. இதனால் இங்கு தீயணைப்பு நிலையத்திற்கு அதிக தேவை உள்ளது. இங்குள்ள தீயணைப்பு நிலையம் வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. இதன் காரணமாக தீயணைப்பு பணிக்கு தேவையான தண்ணீர் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டால் தேவையான கட்டமைப்பு வசதிகளை விரைவாக ஏற்படுத்தி கொள்ள முடியும். இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வாடகை கட்டிடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட துறையின் சொந்த கட்டிடங்களில் செயல்பட நடவடிக்கை எடுத்தால் ஊழியர்கள் நெருக்கடி இல்லாமல் பணிபுரியலாம். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்