< Back
மாநில செய்திகள்
கவர்னர் ஆர்.என்.ரவி கொடுத்த வேலையை செய்ய முன்வர வேண்டும்-கி.வீரமணி அறிக்கை
மாநில செய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவி கொடுத்த வேலையை செய்ய முன்வர வேண்டும்-கி.வீரமணி அறிக்கை

தினத்தந்தி
|
9 May 2023 8:23 PM IST

ஒரு கற்பனைச் சித்திரத்தை நித்தம் நித்தம் நீரில் வரைந்து காட்டும் கவர்னர் இனியாவது கொடுத்த வேலையை ஒழுங்குடன் செய்ய முன்வரட்டும் என்று கி வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போலி வீடியோ வெளியிட்டு தமிழ்நாடு அரசின்மீது அவதூறு பரப்பிய, பீகாரைச் சேர்ந்த 'யூடியூபர்' மணிஷ் காஷ்யப் தன்னை விடுவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு ''அவர் ஐகோர்ட்டை அணுகாமல் ஏன் நேரடியாக சுப்ரீம் கோர்ட்டிற்கு வருகிறார்'' என்று கேட்டதோடு, ''தமிழ்நாடு எப்படிப்பட்ட மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது; அமைதியான, நிலையான ஆட்சி நடக்கும் மாநிலத்தில் எதை வேண்டுமானாலும் பரப்பி அமைதியற்ற சூழலை உருவாக்குவதா? இவற்றையெல்லாம் காது கொடுத்துக் கேட்க முடியாது'' என்று ஓங்கி அடித்துக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

ஆனால், இங்குள்ள கவர்னர் ஆர்.என்.ரவி அனுதினமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைப் பரப்புச் செயலாளர் போல் பணிபுரிந்து, சனாதனப் பிரசாரம், தி.மு.க. ஆட்சிமீது வெறுப்புமிழ் விதண்டா வாதங்களை வைத்து, பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி, ''தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இல்லை; அமளிக் காடாகி உள்ளது; சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது'' என்ற ஒரு கற்பனைச் சித்திரத்தை நித்தம் நித்தம் நீரில் வரைந்து காட்டுகிறார். இனியாவது கொடுத்த வேலையை ஒழுங்குடன் செய்ய கவர்னர் முன்வரட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்