டிஎன்பிஎஸ்சி செயலாளராக கோபால சுந்தர ராஜ் நியமனம்
|உமா மகேஸ்வரி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த நிலையில் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளராக கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு செயலாளரும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருமான அஜய் யாதவ் ஐஏஎஸ் இதனை அறிவித்துள்ளார்.
முன்னதாக உமா மகேஸ்வரி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த நிலையில் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.
கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ், வணிக வரித்துறை இணை இயக்குநர், தென்காசி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், கீழக்கரை அருகே மாவிலை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால சுந்தர ராஜ். தமிழ் வழியில் கல்வியை முடித்தவர். ராஜஸ்தானில் விஞ்ஞானியாகப் பணியாற்றிய அவர், குடிமைப் பணியின் மீது ஆர்வம் கொண்டு, அப்பணியைத் துறந்தார்.
தன்னுடைய மூன்றாவது முயற்சியில் அகில இந்திய அளவில் 5-ம் இடத்தைப் பிடித்து ஐஏஎஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.