சென்னை
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வியாபாரியை கொன்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வியாபாரியை கொன்றவர் மீது போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி ராஜேஸ்வரி (வயது 34) என்பவர் கடந்த மாதம் 19-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருடைய தங்கை நாகவல்லி (23), அவருடைய கணவர் சக்திவேல் (23) மற்றும் ஜெகதீசன் (23), சூர்யா (19), ஜான்சன் (19) ஆகிய 5 பேரை தாம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சக்திவேல் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான நடவடிக்கையை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எடுத்துள்ளார்.
சென்னையில் வீடு புகுந்து திருடிய வழக்கில் கைதான குமணன்சாவடியை சேர்ந்த ஜான் பாட்ஷா (38), திருவொற்றியூரை சேர்ந்த அமீனுதீன் (32), வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த சூர்யா (22), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (23), வில்லிவாக்கத்தில் சதாம் உசேன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதான வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் (29), ஆட்டோ ராஜ் (36), விஜி (36), சோயா சுரேஷ் (31), ராஜேஷ் (30), கஞ்சா வழக்கில் சிக்கிய விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த சைமன் (29), வடசென்னையில் தமிழரசன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான கிஷோர்குமார் (28) ஆகிய 11 பேர் மீதும் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.