தர்மபுரி
சிறுவன் கொலை வழக்கில் கைதானவாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|கிருஷ்ணாபுரம் அருகே பாலியல் தொல்லை கொடுத்து சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சிறுவன் கொலை
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் கடந்த ஜூலை மாதம் வீட்டின் அருகே விளையாட சென்றான். அந்த சிறுவன் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதுதொடர்பான புகாரின்பேரில் கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள பயன்பாடு இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிறுவன் இறந்து கிடப்பது தெரியவந்தது.
சிறுவனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிரகாஷ் (19) என்பவர் சிறுவனை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பதும், பின்னர் சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது.
குண்டர் சட்டத்தில் கைது
இதுதொடர்பாக போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இதையடுத்து கிருஷ்ணாபுரம் போலீசார், குண்டர் சட்டத்தின் கீழ் பிரகாசை கைது செய்தனர். இவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.