< Back
மாநில செய்திகள்
சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கன்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.2¾ கோடி பொருட்கள் நூதன கொள்ளை - 7 பேர் கொண்ட கும்பல் கைவரிசை
சென்னை
மாநில செய்திகள்

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கன்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.2¾ கோடி பொருட்கள் நூதன கொள்ளை - 7 பேர் கொண்ட கும்பல் கைவரிசை

தினத்தந்தி
|
7 Sept 2022 2:40 PM IST

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்வதற்காக கன்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.2¾ கோடி பொருட்கள் நூதனமுறையில் கொள்ளையடிக்கப்பட்டது.

தாம்பரம் சானடோரியத்தில் மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் இயங்கி வருகிறது. அங்கிருந்து தனியார் மருந்து நிறுவனம் சார்பில் ஆகஸ்டு 18-ந்தேதியன்று 14 ஆயிரத்து 400 கிலோ மருந்து பொருட்களை கன்டெய்னர் லாரி மூலம் ஜெர்மன் நாட்டிற்கு அனுப்பினர். இதற்கிடையில் கன்டெய்னர் லாரியில் இருந்து நூதன முறையில் மருந்து பொருட்கள் திருடப்பட்டதாக நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சென்னை துறைமுகத்திற்கு சென்று, மருந்து பொருட்களை எடை போட்டனர். அதில், 4,800 கிலோ பொருட்கள் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், தாம்பரம் துணை கமிஷனர் சிபிசக்ரவர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அதில், இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27), இளமாறன் (29) மற்றும் திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திக் (40), தண்டையார்பேட்டையை சேர்ந்த முணியாண்டி (36) ஆகிய 4 பேரை கைது செய்தனர். ராஜேஷ், சங்கர், சிவபாலன் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த 7 பேர் கொண்ட கும்பல், கன்டெய்னர் லாரி டிரைவர்களின் உதவியுடன் பொருட்களை திருடி மீஞ்சூர் அருகேயுள்ள கவுண்டர்பாளையத்தில் பதுக்கி வைத்து அதிக பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.

மேலும் இந்த கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும், ரூ.1.50 கோடி மருந்து பொருட்கள்; ஆம்பூரில் இருந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள 3 ஆயிரம் ஜோடி காலணிகள், திருப்போரூரில் இருந்து கன்டெய்னரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.50 லட்சம் கீ போர்ட் இசைக்கருவி என ரூ.2.75 கோடி மதிப்புள்ள பொருட்களை திருடியது தெரியவந்தது. இதற்காக டிரைவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை இந்த கும்பல் பணம் கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த கும்பல் கன்டெய்னர்களின் சீலை அகற்றாமல் மேலே மற்றும் கீழே உள்ள அச்சாணிகளை கழற்றி விட்டு பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டு தாம்பரம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட பொருட்களை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேரில் பார்வையிட்டார். குற்றவாளிகளை திறமையாக பிடித்த இன்ஸ்பெக்டர்கள் ஆல்வின் ராஜ் சந்துரு, சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்பட தனிப்படை போலீசாரை அவர் பாராட்டினார்.

மேலும் செய்திகள்