கரூர்
மறுசுழற்சி செய்த துணிகளுக்கு வெளிநாட்டில் நல்ல வரவேற்பு: ஏற்றுமதியாளர்கள் தகவல்
|மறுசுழற்சி செய்த துணிகளுக்கு வெளிநாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது என ஜெர்மனி ஜவுளி கண்காட்சிக்கு சென்று திரும்பிய ஏற்றுமதியாளர்கள் கூறினர்.
ஜவுளி கண்காட்சி
ஜெர்மனி நாட்டில் உள்ள பிராங்பட் நகரில் உலக அளவிலான ஜவுளி கண்காட்சி கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவில் இருந்து 350-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், கரூரில் இருந்து மட்டும் 80 ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் கண்காட்சியில் பங்கேற்று விட்டு ஏற்றுமதியாளர்கள் கரூர் திரும்பினர்.
பேட்டி
இதில், கரூர் திரும்பிய ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் ஸ்டீபன்பாபு மற்றும் ஏற்றுமதியாளர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஜெர்மனியில் ஆண்டு தோறும் நடைபெறும் ஜவுளி கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆர்டர்களை பெற்று வருவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு நடந்த கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இருப்பினும் வெளிநாட்டினர் உக்ரைன்-ரஷ்யா போரின் தாக்கத்தால் தற்போது உணவு பொருட்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். கண்காட்சியில் பங்கேற்ற வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ஜவுளி உற்பத்தியின்போது தேவையின்றி கழிவாக கருதப்படும் துணிகளை ஒருங்கிணைத்து, அவற்றில் இருந்து மீண்டும் நூல் தயாரித்து அதில் இருந்து உருவாகும் ஜவுளி துணிகளை உற்பத்தி செய்து கொடுத்தால் அதிக அளவில் வாங்குவதாக கூறுகிறார்கள்.
பருத்தி தட்டுப்பாடு
தற்போது நூல் விலை உயர்வு, பருத்தி உற்பத்தியும், பருத்தி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த மறுசுழற்சி முறை ஈடு கட்டும் வகையில் மிகவும் பயனுள்ளதாக அமையும் வாய்ப்பு உள்ளது. எனவே இதற்கு முன் ஜவுளி உற்பத்தி செய்யும்போது கழிவாகும் துணிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தோம். ஆனால் இப்போது மறுசுழற்சி செய்த துணிகளுக்கு வெளிநாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இனி உள்ளூரிலேயே கழிவு துணிகளுக்கு தேவை அதிகம் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.