நாமக்கல்
தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
|நாமக்கல் மாவட்டத்தில் புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
புனிதவெள்ளி
இயேசுவை சிலுவையில் அறைந்த நாளை ஆண்டுதோறும் புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகிறார்கள். அதன்படி இந்த ஆண்டு நேற்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி நாமக்கல்லில், திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் பங்கு தந்தை செல்வம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதன் பிறகு சிலுவை பாதை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாமக்கல் அசெம்பிளி ஆப் காட் சபையில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். மேலும் கணேசபுரம் சி.எஸ்.ஐ. சர்ச், தமிழ் பாபிஸ்து திருச்சபை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் இயேசுவை மறைவு குறித்த போதனைகளும் நடந்தது. இதேபோல் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு பிரார்த்தனை
இதேபோல் ராசிபுரம் தூய லூர்து அன்னை ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி ராசிபுரம் பங்குத்தந்தை ஜான் ஆரோக்கியராஜ் தலைமையில் திருச்சிலுவை பாதை நடந்தது. இதில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு திருச்சிலுவையை சுமந்து சென்று 14 ஸ்தலம் சிலுவைப் பாதையை சிறப்பாக நடத்தினர்.
நாமகிரிப்பேட்டையில் பழமை வாய்ந்த மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இதேபோல் காக்காவேரி நெடுஞ்சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.