சென்னை
வங்கி உதவி மேலாளர் உள்பட 2 வீடுகளில் 50 பவுன் நகை கொள்ளை
|அரும்பாக்கம் மற்றும் புழலில் வங்கி உதவி மேலாளர் உள்பட 2 வீடுகளின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வங்கி உதவி மேலாளர்
சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 37). இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது வீட்டை பூட்டி விட்டு வேப்பம்பட்டில் வசிக்கும் தனது தந்தையை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி விஜயராஜ்க்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தார்.
25 பவுன் நகை கொள்ளை
அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோ லாக்கரில் வைத்து இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி ஆகியவற்றை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
இதுபற்றி விஜயராஜ் அளித்த புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டார்.பின்னர் சாமி தரிசனம் முடிந்து நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை, ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.