மதுரை
1½ ஆண்டுகளில் 30 லட்சம்மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
|கடந்த 1½ ஆண்டுகளில் 30 லட்சம் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டுள்ளதாக மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்
கடந்த 1½ ஆண்டுகளில் 30 லட்சம் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டுள்ளதாக மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் கழகத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மதுரை கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட செயலாளர் கோ.தளபதிஎம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மூத்த கழக நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி சிறப்பித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மதுரையில் கடந்த 2017-ம் ஆண்டு மூத்த கழக நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தற்போது வரை சிறப்பாக மூத்த கழக நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 1½ வருடங்களில் 30 லட்சம் மூத்த நிர்வாகிகளுக்கு ரூ.40 கோடி மதிப்பில் பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது. மூத்த முன்னோடிகள் இல்லாமல் தி.மு.க. கழகம் கிடையாது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் சிறப்பாக பணியாற்றுவதற்கு மூத்த நிர்வாகிகளே காரணம்.தி.மு.க.வின் வளர்ச்சிக்கும் அவர்கள் தான் காரணம்.
சனாதனம்
சனாதனம் ஒழிக்கப்பட்டு விட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி வருகிறார். சனாதனத்தை ஒழித்து விட்டேன் என அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரிடம் அவரால் கூற முடியுமா?. அவர் அப்படி கூறினால் அவரது தலைக்கு எத்தனை கோடி விலை வைப்பார்கள் என்பது தெரியாது. மேலும் நான் நடிகன் என அவர் கூறுகிறார். நான் நடிகன் என்றால்எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நடிகர்கள் என்பது அவருக்கு தெரியாதா?
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததையும் செய்திருக்கிறோம். அறிவிக்காததையும் செய்து வருகிறோம். தி.மு.க.வின் மகளிர் இலவச பஸ் பயணத் திட்டம், காலை உணவு திட்டம், பெண் கல்வி திட்டம், கலைஞர் உரிமைச்தொகை திட்டம் ஆகிய 4 திட்டங்களும் எங்களின் சிறப்பான ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் அமைச்சர்கள் மூர்த்தி, பெரியகருப்பன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மேயர் இந்திராணி பொன்வசந்த், பழங்காநத்தம் பகுதி செயலாளர் கவுன்சிலர் எஸ்.வி. சுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.