சென்னை
வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகை கடையில் தங்க சங்கிலி திருட்டு: தாய்-மகள் கைது
|சென்னையை அடுத்த மாதவரத்தில் வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகை கடையில் தங்க சங்கிலி திருடிய தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த மாதவரம் மூலக்கடை பகுதியில் நகை கடை நடத்தி வருபவர் முகமது நசீர் (வயது 56). கடந்த 21-ந்தேதி இவரது கடைக்கு மாதவரத்தை அடுத்த பொன்னியம்மன்மேடு ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா(43), தனது மகள் ஜெயஸ்ரீ(24), மகன் சசிதரன்(21) ஆகியோருடன் வாடிக்கையாளர்போல் வந்தார். பின்னர் நகை வாங்குவதுபோல் நடித்து 3 பேரும் சேர்ந்து 2 பவுன் தங்க நகையை திருடிச்சென்றுவிட்டனர்.
அவர்கள் சென்ற பிறகு முகமது நசீர், கடையில் இருந்த நகைகளை ஆய்வு செய்தார். அப்போது 2 பவுன் தங்கச்சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தார்.
அதில், ஷர்மிளா உள்பட 3 பேரும் நகையை திருடும் காட்சி பதிவாகி இருந்தது. இதுபற்றி முகமது நசீர் அளித்த புகாரின்பேரில் மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஷர்மிளா, மகள் ஜெயஸ்ரீ, மகன் சசிதரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.