< Back
மாநில செய்திகள்
மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
கடலூர்
மாநில செய்திகள்

மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
16 Oct 2022 12:42 AM IST

பெண்ணாடம் அருகே மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது. மேலும் 3 வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண்ணாடம்,

கதவு உடைப்பு

பெண்ணாடம் அடுத்த அரியராவி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி சரஸ்வதி (வயது 70). இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். மகன் அருணகிரி, சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோவிந்தசாமி இறந்து விட்டதால் சரஸ்வதி மட்டும் அரியராவியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி வழக்கம்போல் வீட்டில் உள்ள அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு மர்மநபர் உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அந்த நபர் பூஜை அறையில் வைத்திருந்த பெட்டிகளை திறந்து பார்த்துக்கொண்டிருந்தார். இந்த சத்தம் கேட்டு எழுந்து வந்த சரஸ்வதி, மர்மநபர் கையில் செல்போன் டார்ச்சுடன் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

நகை பறிப்பு

இதில் சுதாரித்துக் கொண்ட அந்த மர்ம நபர் தான் அணிந்திருந்த கைலியால் சரஸ்வதியின் வாயை பொத்திக்கொண்டு, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கலியை பறித்து சென்றார். அப்போது அவர் தான் அணிந்திருந்த கைலி மற்றும் கதவை உடைக்க பயன்படுத்திய கடப்பாரையை அங்கேயே விட்டுவிட்டு, வேறு துணிகளை எடுத்து சென்றார்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின், பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரஸ்வதியிடம் விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

அப்போது, சரஸ்வதி வீட்டின் அருகில் இருந்த கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன் ஆகியோரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, 4 வீடுகளிலும் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மூதாட்டியிடம் 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு அடுத்தடுத்து மூன்று வீடுகளில் ெகாள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்