கன்னியாகுமரி
வங்கி உதவி பெண் மேலாளரிடம் தங்க சங்கிலி பறிப்பு
|மார்த்தாண்டம் அருகே வங்கி உதவி பெண் மேலாளரிடம் 6½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே வங்கி உதவி பெண் மேலாளரிடம் 6½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
வங்கி உதவி பெண் மேலாளர்
மார்த்தாண்டம் அருகே உள்ள நல்லூர் மதிலகம் பகுதியை சேர்ந்தவர் பிரவின் ராஜ். இவருடைய மனைவி பிரியா சைனி (வயது 28). இவர் குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணி புரிந்து வருகிறார். பிரியா சைனி தினமும் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்வது வழக்கம்.
இந்தநிைலயில் நேற்று முன்தினம் பிரியா சைனி வழக்கம்போல இருசக்கர வாகனத்தில் காலையில் வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து இரவு 8 மணிக்கு வீட்டுக்கு திரும்பி மார்த்தாண்டம் அருகே பயணம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
6½ பவுன் சங்கிலி பறிப்பு
அப்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பிரியா சைனி கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது தங்கச் சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதனால் சங்கிலி இரண்டு துண்டுகளாக அறுந்தது. இதில் 6½ பவுன் பிரியா சைனியின் வசமும், மீதி 6½ பவுன் மர்மநபர்களிடமும் சிக்கியது.
உடனே அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து பிரியா சைனி மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.