திருவள்ளூர்
திருத்தணியில் ஓடும் பஸ்சில் முதியவரிடம் தங்க சங்கிலி பறிப்பு - போலீசார், சக பயணிகள் கொள்ளையனை மடக்கி பிடித்தனர்
|திருத்தணியில் ஒடும் பஸ்சில் முதியவரிடம் தங்க சங்கிலி பறித்த கொள்ளையனை போலீசார், சக பயணிகள் மடக்கி பிடித்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஸ்த்திரி அடுத்த பி.பி.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது 73). நேற்று இவருடைய தம்பி மகனுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக அவர் தனது மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 65) மற்றும் உறவினர்களுடன் ஸ்ரீகாளஸ்த்திரி இருந்து அரக்கோணம் செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறி வந்தார். பஸ்சில் முதியவர் சுந்தரம் அருகே ஒருவர் அமர்ந்து பயணம் செய்து வந்தார்.
திருத்தணி பைபாஸ் ரவுண்டானா அருகே பஸ் வந்தபோது முதியவர் சுந்தரம் சட்டை பையில் வைத்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை அருகில் இருந்த நபர் பறித்து விட்டு பஸ்சில் இருந்து குதித்து ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் சுந்தரம் கூட்டலிடவே சக பயணிகள் மற்றும் அப்பகுதியில் பாதுகாப்பில் இருந்த போலீசார் நகையை திருடி கொண்டு ஓடிய நபரை துரத்திச் சென்று பிடித்தனர். பின்னர் அந்த நபரை திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நகை திருட்டு ஈடுபட்ட நபர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா அடுத்த காரகம்பேடு பகுதியைச் சேர்ந்த ரஜினி (47) என்பதும், முதியவரிடம் நகை இருப்பதை தெரிந்து பஸ்சில் பின் தொடர்ந்து வந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் தங்க சங்கிலியை பத்திரமாக முதியவரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினியை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.