செங்கல்பட்டு
சாலையில் நடந்து சென்ற ஆசிரியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
|கூடுவாஞ்சேரியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி ஆசிரியையின் 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு விஷ்ணுப்பிரியா நகர் பகுதியை சேர்ந்தவர் லலிதா (வயது 50). பெருமாட்டுநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலை தனது கணவர், குழந்தைகளுடன் கூடுவாஞ்சேரிக்கு சென்று குழந்தைகளுக்கு தேவையான பள்ளி உபகரணங்களை வாங்கி உள்ளார். பின்னர் இவரது கணவர், குழந்தைகளை மோட்டார் சைக்கிள்களில் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் லலிதா மட்டும் ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு செல்வதற்காக சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி ரெயில்வே நிலைய சந்திப்பு அருகே செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் லலிதா கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி சென்றார்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் லலிதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.