திருவள்ளூர்
மீஞ்சூரில் மூதாட்டியிடம் 4½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
|மீஞ்சூரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4½ பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் பறித்துச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மூதாட்டி
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்டது புதுப்பேடு கிராமம். இங்கு வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது மனைவி தங்கமணி (வயது 62). இவர் மீஞ்சூர் பஜாருக்கு வந்து பொருட்களை வாங்கி விட்டு பின்னர் வீட்டிற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று தலைமறைவாயினர்.
வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற சங்கிலி பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.