நாமக்கல்
மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் 13½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
|பள்ளிபாளையம் அருகே மிளகாய் பொடியை தூவி பெண்ணிடம் 13½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பள்ளிபாளையம்
தங்க சங்கிலி பறிப்பு
பள்ளிபாளையம் அருகே மொளசி சுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 30). ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விகாஷினி (25). இவர்களுக்கு 10 மாத கைக்குழந்தை உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு விகாஷினி கைக்குழந்தைக்கு வீட்டு வாசலில் வைத்து உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். பின்பு தனது தாயிடம் குழந்தையை கொடுத்துவிட்டு வராண்டாவில் உள்ள வாஸ்பேஷனில் கையை கழுவி கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத 25 வயதுடைய வாலிபர் ஒருவர் வேகமாக ஓடி வந்து விகாஷினியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி உள்ளார். பின்பு அவரது கழுத்தில் இருந்த 10½ பவுன் தங்க சங்கிலி மற்றும் 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு காம்பவுண்டு சுவர் ஏறிக்குதித்து விவசாய காட்டுக்குள் தப்பி ஓடி விட்டான்.
விசாரணை
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விகாஷினி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் மர்மநபரை காட்டுக்குள் சென்று தேடி பார்த்தபோது தப்பிய ஓடியது தெரியவந்தது. இது குறித்து விகாஷினி மொளசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பள்ளிபாளையம் அருகே மிளகாய் பொடியை தூவி பெண்ணிடம் 13½ பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.