கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு வழங்கபட்ட ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது
|கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு வழங்கபட்ட ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்து உள்ளது.
சென்னை
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் சுவாதி என்ற இளம்பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்
இந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது அதன் விவரம் வருமாறு:-
கோகுல்ராஜ் கொலைவழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளது.மதுரை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை.
யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு வழங்கபட்ட ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்து உள்ளது.
யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும்.