கோகுல்ராஜ் கொலை வழக்கு - சுவாதியின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது...!
|கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
கோகுல்ராஜ் கொலை வழக்கு ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தொடக்கத்தில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக சுவாதி இருந்துள்ளார். இதனால் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது. அதன்பின் அவர் முன் தெரிவித்த வாக்குமூலத்திற்கு எதிரான தகவல்களை தெரிவித்ததால் பிறழ்சாட்சியாக அறிவிக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் ஏதோ நடந்திருக்கிறது என்பது தெரிகிறது.
சுவாதியை மீண்டும் சாட்சி கூண்டில் ஏற்ற எங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவது அவசியமாகிறது. சுவாதியை போதுமான பாதுகாப்புடன் இந்த கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி கடந்த 25-ம் தேதி நீதிபதிகள் முன்பு சுவாதி ஆஜரானார். அப்போது கடந்த 23.6.2015 அன்று நடந்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா? ஞாபகம் இருக்கிறதா? அன்று கோகுல்ராஜை பார்த்தீர்களா? என கேள்வி எழுப்பினர். ஆனால் சுவாதி அன்று பார்க்கவில்லை என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் கோவிலில் பதிவான வீடியோவை காண்பித்து அதில் உள்ள பெண், பின்னால் வரும் ஆண் யாரென கேள்வி எழுப்பினர். அப்போது வீடியோவில் இருப்பதுதான் இல்லை என்று கண்ணீர் மல்க சுவாதி தெரிவித்தார். இதனை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.
தொடர்ந்து நீதிபதிகள் சுவாதியை பார்த்து கூறுகையில், மாஜிஸ்திரேட்டிடம் கூறிய வாக்குமூலத்திலும், தற்போது கூறிய வாக்குமூலத்திலும் வேறுபாடுகள் உள்ளது. ஜாதியை விட சத்தியம் முக்கியம். நீங்கள் இங்கு புத்தகத்தில் கை வைத்து உண்மை தகவல்களை கூறுவதாக சத்தியம் செய்தீர்கள். நீங்கள் பேசியதாக கூறப்படும் ஆடியோவை சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதில் உண்மை தெரிந்துவிடும் என கோபத்துடன் நீதிபதிகள் கூறினர்.
15 நிமிடத்திற்கு பின் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் ஒத்திவைத்தனர். பின்னர் தொடங்கிய விசாரணையின் போது சுவாதி திடீரென மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து சுவாதி வரும் 30-ம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரை கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் சுவாதி ஆஜரானார். இந்த நிலையில் சுவாதி பொய்யான சாட்சியம் அளித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், உண்மையை கூற சுவாதிக்கு வாய்ப்பளிக்க இரண்டு வாரம் அளிக்கப்படுகிறது என்று வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.