'ஓ.பன்னீர் செல்வத்திற்கு இறைவன் கொடுத்த தண்டனை' - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
|அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு விதித்த இடைக்கால தடை தொடரும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
அ.தி.மு.க. பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி சதிஷ்குமார் முன்பு நடைபெற்றது. அப்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் அதே பதவியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் ஓபிஎஸ் தரப்பு, தனி நீதிபதி முன் உரிய மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,' நியாயமான ஒரு நல்ல தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. தொடர்ந்து அதிமுக தொண்டர்களின் மனஉளைச்சலுக்கு ஆளாகும் வகையில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் ஓ.பன்னீர் செல்லவத்திற்கு தகுந்த தண்டனையை இறைவனே வழங்கியுள்ளார்' இவ்வாறு அவர் கூறினார்.