ராணிப்பேட்டை
கோவில் கதவை உடைத்து அம்மன் தாலி, உண்டியல் திருட்டு
|ஆற்காடு அருகே கோவில் கதவை உடைத்து அம்மன் தாலி மற்றும் உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு அருகே கோவில் கதவை உடைத்து அம்மன் தாலி மற்றும் உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் கதவு உடைப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த பழைய மாங்காடு பகுதியில் நாகநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 150 கிலோ எடை கொண்ட ஐம்பொன்னால் ஆன நடராஜர், மாணிக்கவாசகர், சிவகாமி, பிரதோஷ நாயகர் மற்றும் அம்மன், விநாயகர், முருகர் சிலைகளும் உள்ளன. உமாமகேஸ்வரன் என்ற அர்ச்சகர் தினசரி வந்து பூஜைகள் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
அதேபோல் நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்துவிட்டு கோவிலின் நடையை சாத்திவிட்டு சென்றுள்ளார். நேற்று அதிகாலை சபரிமலைக்கு சென்று திரும்பிய அய்யப்ப பக்தர்கள் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது கோவிலின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அம்மன் தாலி, உண்டியல் திருட்டு
உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதில் சுமார் ரூ.20,000 இருந்திருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அம்மன் கருவறையின் கதவும் உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் பூஜை பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே பகுதியில் உள்ள மகாபலி அம்மன் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கதவை உடைத்து உண்டியலில் இருந்த சுமார் ரூ.60 ஆயிரம் திருடப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த இரண்டு கோவில்களிலும் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் தாலி திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.