< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே கோவில் குளத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே கோவில் குளத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு

தினத்தந்தி
|
19 May 2022 12:37 PM IST

திருவள்ளூர் அருகே கோவில் குளத்தில் இருந்து அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியம் கலியனூர் கிராமத்தில் கனத்தாட்டங்கா சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் குளத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெண்கள் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பெண்கள் பணியில் ஈடுபட்டபோது கடப்பாரையால் பள்ளம் தோண்டும் போது சிலை ஒன்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில் நிர்வாகி லட்சுமணனிடம் கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகி லட்சுமணன் திருவள்ளூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார்.

தாசில்தார் செந்தில்குமார் வருவதற்குள் கிராம மக்கள் அந்த கல்லால் ஆன அம்மன் சிலையை எடுத்து மஞ்சள், குங்குமம் பூசி, கற்பூரம் ஏற்றி வழிபட தொடங்கினர். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் பழங்கால சிலையை ஆய்வு செய்தார். அப்போது கலியனூரில் உள்ள கோவிலில் வைத்து பூஜை செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுத்த நிலையில் பெண்ணுக்கு சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்சிலையை பார்வையிட்ட தொல்லியல் துறையினர் இது 15-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும், ஸ்ரீதேவியின் மூத்த சகோதரி மூத்ததேவியின் சிலை என்றும் தெரிவித்தனர். அவர்கள் பல்லவர்கள் காலத்தில் செல்வத்திற்காகவும் வளத்திற்காகவும் நீர்நிலைகளில் வைத்து வழிபட்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் தமிழகத்தில் பெரும்பாக்கம் தென் திருவள்ளூர் போன்ற இடங்களில் வைத்து வழிபாடு செய்திருப்பதாகவும் தெரிவித்ததோடு மூத்ததேவியின் கையில் இருப்பது மகன் மாந்தன், மகள் மாந்தி என்றும் தெரிவித்தனர். மேலும் பாற்கடலில் அமிர்தம் கரைத்த போது ஸ்ரீதேவிக்கு முன் வந்ததால் மூத்த தேவி என்று அழைப்பதுண்டு. பல்லவர்கள் கால தமிழர்கள் வணங்கிய தெய்வம் என்றும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்