திருப்பூர்
மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதிகளில் 95 விநாயகர் சிலைகள் கரைப்பு
|மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதிகளில் அமராவதி ஆற்றில் 3-வது நாளாக 95 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதிகளில் அமராவதி ஆற்றில் 3-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
நீர்நிலைகளில் கரைப்பு
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலம் உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்கள் மற்றும் வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு 3 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தி அன்னதானம் வழங்குவார்கள்.
ஆனால் தற்போது பாதுகாப்பு கருதி அடுத்த நாள் முதலே ஒவ்வொரு இந்து அமைப்புகள் மற்றும் ஒவ்வொரு பகுதி என பிரித்து நேரம் ஒதுக்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இந்த ஆண்டில் மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதிகளில் அமராவதி ஆற்றில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்பு
முதல் நாளில் குடிமங்கலம் பகுதியிலுள்ள சிலைகள் மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன. 2-வது நாளில் உடுமலை மற்றும் குடிமங்கலம் பகுதிகளிலிருந்து 157 சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்தநிலையில் 3-வது நாளான நேற்று மடத்துக்குளம், கணியூர், குமரலிங்கம் பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 95 சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.
இதில் குமரலிங்கம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அங்குள்ள ஆற்றிலும் மற்றவை மடத்துக்குளம் ஆற்றிலும் கரைக்கப்பட்டன. தொடர்ந்து 3 நாட்களாக உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜாகண்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்த்ததற்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.