பெரம்பலூர்
சிறுவாச்சூர் சந்தையில் ரூ.30 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
|ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறுவாச்சூர் சந்தையில் ரூ.30 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது.
ஆட்டுச்சந்தை
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் இருந்து அய்யலூர் செல்லும் சாலையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வரும். இந்த ஆடுகளை வாங்குவதற்காக ஆடு வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் வந்து செல்வார்கள்.
அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்று அதிகாலை 3 மணியளவில் சிறுவாச்சூரில் ஆட்டுச்சந்தை தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடு வளர்ப்போர் மற்றும் விற்பனையாளர்கள் லாரி, சரக்கு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு அதிகாலையில் இருந்தே சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் குவிய தொடங்கினர்.
ரூ.30 லட்சத்துக்கு விற்பனை
இன்று (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஆடுகளை வாங்க முஸ்லிம்கள், வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள் வருவார்கள் என்று ஆடுகளுடன் கால்நடை வளர்ப்போர்களும், ஆட்டு வியாபாரிகளும் சந்தைக்கு வந்தனர். ஆனால் அருகே உள்ள திருச்சி மாவட்டம், சமயபுரம், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம், கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தை ரம்ஜான் பண்டிகையையொட்டி முன்கூட்டியே நேற்று ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டது.
இதனால் எதிர்பார்த்த அளவுக்கு சிறுவாச்சூர் சந்தைக்கு ஆடுகளை வாங்க ஆட்கள் வரவில்லை. இருப்பினும் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடுகளின் விலை உயர்வால் சந்தையில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடந்தது. ரூ.30 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.