புதுக்கோட்டை
புதுக்கோட்டை சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
|ரம்ஜான் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
வாரச்சந்தை
புதுக்கோட்டை சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி, காரைக்குடி, தேவக்கோட்டை, தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.
இந்தநிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று வழக்கத்தைவிட ஆடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன.
ரூ.1 கோடிக்கு வர்த்தகம்
இந்த சந்தைக்கு புதுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து செம்மறி மற்றும் வெள்ளாடுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை கொண்டு வரப்பட்டன. வழக்கமாக செம்மறி ஆடுகளின் விற்பனை அதிகமாக இருந்து வரும் நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி வெள்ளாடு விற்பனை அதிகமாக இருந்தது. ஒரு ஆடு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
இதில் பெட்டை ஆடுகளை விட கிடா ஆடுகளின் விற்பனை அதிகமாக இருந்தது. நேற்று ஒரு நாள் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.1 கோடிவரை வர்த்தகம் நடைபெற்றது. மேலும் அடுத்தவார சந்தையில் ஆடுகளின் விற்பனை இன்னும் அதிகமாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.